Saturday 16 May 2020

காந்தி பிறந்த பூமி-6


காந்தி பிறந்த பூமி
[காப்பியம்]
பழம்பெரும் காப்பியங்கள் கடவுள் வாழ்த்து ,நாட்டு வர்ணனை,நகர் வர்ணனை என இலக்கண மதில்கள் கட்டிய  இலக்கிய வரையறைக்குள் நின்றன. கவிதை இலக்கணம் உடைந்து காட்டாற்று வெள்ளமாகப் பெருகிச் சுனாமிச்சூறாவளியானது. இந்தக்காப்பியமும் இலக்கணம் உடைத்து வருகிறது.
இதைக்காப்பியம் என்று ஏற்பது மறுப்பது என்ற இரண்டும் கற்றறிந்து துறைபோகிய புலவர் மக்கள் தீர்ப்பு. நான் வெறும் கவிஞன். புதுமைப்பித்தன் காட்டிய வழியில் நடப்பவன்.விமரிசனம் உங்கள் தராசுக்கோல் தான். எழுதியது மட்டும் நான்.இப்போது காந்தி மீது காப்பியம் எழுத என்ன அவசியம் என்ற கேள்விக்கு எவர் மீதும் காப்பியம் எழுத என்ன அவசியம் என்ற கேள்வியே பதில். இது ஆணவம் என்றால் அதுவும் உங்கள் துலாக்கோல் வழங்கும் தீர்ப்பே.எல்லாத் தீர்ப்புக்களும் திருத்தி எழுதப்படும்.
காந்தி பிறந்த பூமி-1
நான் பறை கொட்டிப் புகழ்பாடி
வயிறுவளர்க்கும்  தெருப்பாடகனுமில்லை;
தாங்கள் தேசபிதாவுமில்லை
மோஹன்தாஸ் , தேசபிதாபீடத்தில்
வேறு நபரை உலக ஏகாதிபத்தியத்தின்
மணி முடி சுமப்போர் நியமித்தாயிற்று
சேவாகிராமம் காண வந்து செருக்கு
முடுக்கில் நீ சுற்றிய ராட்டையை
அலட்சியம் செய்து அகன்றுபோனது அறிவீனம்
உலகவீதிகளின் ஒவ்வொரு வீட்டின் முன்பும்
பறை தட்டிக்கொட்டிப்  பாடினாலும்
எட்டிப்பார்த்து திறக்க ஆளில்லை!
அச்சம் வென்று நடந்து காட்டினாய்
இன்று கொரோனா பீதி
மனிதப்பதரென எச்சில் கூட
உமிழாமல் நடுங்குகின்றது
உங்களைக் கொன்று எரித்த சாம்பல்
நாடு முழுதும் என்றோ கரைந்து
காற்று குடித்து சுழன்று மறைந்தது
விடைபெறுங்கள் மோஹன்தாஸ்
நூற்றிருபது ஆண்டுகள் வாழ்வதாகச்
சொன்ன வாக்கை எழுபத்தெட்டில்
முடித்துவிட்டோம், காந்தி புராணம்
காந்தி காவியம், காந்தி காமிக்ஸ்
காந்தி திரைப்படம் ,காந்தியின் கதையென
மூக்கைச்சிந்திக்கரைத்து உருக்கி
வராத கண்ணீரை வரவழைத்து
வில்லுப்பாட்டுப் பாடி விவரித்த
மகாத்மியம் இன்று பழங்கஞ்சி!
காக்கை கூட அமரத்தயங்கும் ;
 பஸ் ஸ்டாப் பெயருக்குப்
பயன்படும் காந்தி மண்டபம்,
காதலர்களின் சந்திப்பு மையம்
கரன்சி நோட்டில் கூட
தங்கள் மூக்குக்கண்ணாடியை
மட்டும் போனால் போகட்டுமென
விட்டுவைத்த நாங்கள் சந்திரனுக்குக் 
குறிவைத்த சந்திரயானைத்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தொலைந்து போய்விட்டது .
மரணமூச்சுவிடும் காந்தீயத்தையும்
புதைத்த குழியில் இருந்து
விடுவித்து என்ன புண்ணியம்?
சமாதிவழிபாடுகளில் தயிர்வடை
எண்ணிக்கை கூடி வருகிறது! [தொடரும்]

Sunday 1 September 2019

ஈரப்படுத்திய இலை

காந்தி பிறந்த பூமி-
------------------------------------
ஈரப்படுத்திய இலை
------------------------------------
இருண்டிருந்தது கல்கத்தா
ஒளியில் மின்னியது   டில்லி
இந்து முஸ்லீம் மதப்பகையால்.
வன்முறையின் அடிமைப்பாசறையாகிய
நவகாளியின் கோரக்காட்சியில்
மனம் இருண்ட உங்களுக்கு
சுதந்திரம் பெற்ற மனமகிழ்வைப்
பங்கிட விரும்பிய நாடு அனுப்பிய  சேதி
"பாபு, நீங்கள் தான் தேசப்பிதா  ,
விடிகிற 15-8-1947 தான் இந்திய
நாட்டின் முதல் சுதந்திர தினம்.
எப்படி  நாங்கள் கொண்டாடுவோம்  நீங்களின்றி
நேருவும் படேலும் கொடுத்தனுப்பிய
கடிதம்  நடுநிசி கடந்து வந்தது
கொண்டுவந்த தூதுவரிடம்,
நினைவிருக்கிறது  மோகன்தாஸ்
நீங்கள்  கேட்ட முதல் கேள்வி
"நீர் சாப்பிட்டீரா?"
"இல்லையென்று வந்த பதிலுக்கு
நீங்கள் தந்த மறுமொழி"முதலில் சாப்பிடுங்கள்"
தூதுவர் உண்டு முடித்து  மீளும்போது
"என்ன முட்டாள்தனம்? இந்துவும்
முஸ்லிமும் இங்கே வெட்டி மடிகையில்
எப்படி வருவது கோலாகல டில்லிக்கு?
வங்காளத்தின்  அமைதி மீளாதென்றால்
என் உயிரையும் தரத் தயார்  "
நீங்கள் தந்தது இந்தப் பதில்
கண்கள் கலங்கப்பார்த்தார் தூதர்.
நின்றிருந்த மரத்தின் உலர்ந்திருந்த
இலையொன்று வீழ்ந்தது
உங்கள்  தலை மீது
அதை உள்ளங்கையில் வாங்கி,
சிறிது நீர்தெளித்து ஈரமாக்கினீர்
"கொண்டு செல்லுங்கள் இது தான் என் செய்தி;
கடவுளுக்கு நன்றி;
உங்களை  உலர்ந்த இலையோடு
அனுப்பாமல் ஈரப்படுத்தி
அனுப்பவிட்டாரே!"




Friday 30 August 2019

காந்தி பிறந்த பூமி -2

காந்தி பிறந்த பூமி
இல்லை இல்லை குறைகள் காணா மனிதர்கள்;  
நிறைகளை மறுக்கும்  மனிதர்கள் 
பிறப்பதற்கில்லை நிச்சயம் இனிமேல் 
க்ளோனிங் கூடத் தோல்வியுறும் 
குறையும் நிறையும் அலை நுரையாகி
அழிந்து கடந்து ஆவியாகும் 
எதிரிகள் ..எதிரிகள் என எச்சரித்தபடி 
நாடு பிடிக்க நாற்காலிக்காகப் பகைமை 
நஞ்சில் தோய்ந்த நெஞ்சுகள் மத்தியில் .
தாய்ப்பால்  கீதையை அருந்தினாய் ; 
மாற்றம் கண்டாய்  அன்றாடம்
வாய்மை  வாசகம் மலைப்பிரசங்கம்
,அச்சம் வெல்ல தாதி சொன்ன 
ராம் ராமென்ற ஒற்றை மந்திரம் 
போதாதோ மானுட மனமெனும் தொடுவான் 
நோக்கி வழி காட்டி மின்னும் விடிவெள்ளி
வாசித்து வாசித்து வெளிச்சம் கண்டாய்     
வாசிக்க வைத்தாய்,  நேசிக்கச் செய்தாய் ;
வெறுப்போருக்கும் கற்பித்தாய் மோகனதாஸ்
எங்கள் குருதட்சிணை 
மூன்றே மூன்றே குண்டுகள்!
இருளே நிலையென வரலாறில்லை.
காத்திருப்பது;கடமைசெய்வது
இவையே கட்டுமரத்துத் துடுப்புகள்
கடலின் நிலைமை கர்மயோகம்
அலைவீச்சில் ஒரு கதிர்வீச்சை  
காட்டித்தந்தாய், சுட்டுத்தீர்த்தோம் 
உன் சாம்பலின் மீது காந்தி ஜபம்
நடந்து காட்டினாய் போதும்,தொடர்வோம்         


காந்தி பிறந்த பூமி-1.


காந்தி பிறந்த பூமி-2
----------------------------------
ஹே ராம்.ஹே ராம்.    
  --------------------------------------                   
தீர்ந்தது கடனென வெடித்தது இத்தாலியின் 
கைத்துப்பாக்கி மும்முறை
பிரார்த்தனைக்குக் கூடிய கூட்டத்தின் 
கண்முன்னே நடந்து வருகிற 
நாட்டின் தந்தை என்று போற்றுதல்  
பெற்ற மோகன்தாஸே , புவியின் மைந்தனே !
சுட்டான் கோட்ஸே,மடிந்து விழுமுன்
கூப்பிய கையில் ஒடுங்கிய பகைக்கு
புன்னகை ஒன்றைப் பரிசளித்து
முடிந்தது பணியென ஒடுங்கியது 
ஓர் பேருயிர். வரலாற்றின் பக்கம் 
ஒன்று மூடியது.கன்னம் ஒன்றில் 
அறை விழுந்தால் திருப்பிக்காட்டிடு   
மறு கன்னத்தைக் காட்டென்று இயேசு 
சொன்னதை நிலைநாட்டிக்காட்டி 
மடிந்தான் ஒரு மானுடன்   
நாதுராம் நாதுராமென உலகமுழுவதும் 
கொலையாளியின் பெயர் சொல்லி அலறிட 
பாதகம் அறியாத போர்பந்தரின் புதல்வன்
மடிந்தான் பிரார்த்தனையின் வெகுமதி 
பெற்று, என்னைப் பெற்ற கடன் தீர்ந்ததென 
சூரியன் வராத வானம் பார்த்து
இறைவன் விரதம்  நீட்டிக்கச் செய்தானானென
உண்ணாதிருந்த புத்லிபாயின்
நினைவோடு ஹே ராம் என்று 
மண்ணின் மைந்தன் சாய்ந்தது கண்டு
மறைந்தது சூரியன் வானுக்குள் [தொடரும்]