Saturday, 16 May 2020

காந்தி பிறந்த பூமி-6


காந்தி பிறந்த பூமி
[காப்பியம்]
பழம்பெரும் காப்பியங்கள் கடவுள் வாழ்த்து ,நாட்டு வர்ணனை,நகர் வர்ணனை என இலக்கண மதில்கள் கட்டிய  இலக்கிய வரையறைக்குள் நின்றன. கவிதை இலக்கணம் உடைந்து காட்டாற்று வெள்ளமாகப் பெருகிச் சுனாமிச்சூறாவளியானது. இந்தக்காப்பியமும் இலக்கணம் உடைத்து வருகிறது.
இதைக்காப்பியம் என்று ஏற்பது மறுப்பது என்ற இரண்டும் கற்றறிந்து துறைபோகிய புலவர் மக்கள் தீர்ப்பு. நான் வெறும் கவிஞன். புதுமைப்பித்தன் காட்டிய வழியில் நடப்பவன்.விமரிசனம் உங்கள் தராசுக்கோல் தான். எழுதியது மட்டும் நான்.இப்போது காந்தி மீது காப்பியம் எழுத என்ன அவசியம் என்ற கேள்விக்கு எவர் மீதும் காப்பியம் எழுத என்ன அவசியம் என்ற கேள்வியே பதில். இது ஆணவம் என்றால் அதுவும் உங்கள் துலாக்கோல் வழங்கும் தீர்ப்பே.எல்லாத் தீர்ப்புக்களும் திருத்தி எழுதப்படும்.
காந்தி பிறந்த பூமி-1
நான் பறை கொட்டிப் புகழ்பாடி
வயிறுவளர்க்கும்  தெருப்பாடகனுமில்லை;
தாங்கள் தேசபிதாவுமில்லை
மோஹன்தாஸ் , தேசபிதாபீடத்தில்
வேறு நபரை உலக ஏகாதிபத்தியத்தின்
மணி முடி சுமப்போர் நியமித்தாயிற்று
சேவாகிராமம் காண வந்து செருக்கு
முடுக்கில் நீ சுற்றிய ராட்டையை
அலட்சியம் செய்து அகன்றுபோனது அறிவீனம்
உலகவீதிகளின் ஒவ்வொரு வீட்டின் முன்பும்
பறை தட்டிக்கொட்டிப்  பாடினாலும்
எட்டிப்பார்த்து திறக்க ஆளில்லை!
அச்சம் வென்று நடந்து காட்டினாய்
இன்று கொரோனா பீதி
மனிதப்பதரென எச்சில் கூட
உமிழாமல் நடுங்குகின்றது
உங்களைக் கொன்று எரித்த சாம்பல்
நாடு முழுதும் என்றோ கரைந்து
காற்று குடித்து சுழன்று மறைந்தது
விடைபெறுங்கள் மோஹன்தாஸ்
நூற்றிருபது ஆண்டுகள் வாழ்வதாகச்
சொன்ன வாக்கை எழுபத்தெட்டில்
முடித்துவிட்டோம், காந்தி புராணம்
காந்தி காவியம், காந்தி காமிக்ஸ்
காந்தி திரைப்படம் ,காந்தியின் கதையென
மூக்கைச்சிந்திக்கரைத்து உருக்கி
வராத கண்ணீரை வரவழைத்து
வில்லுப்பாட்டுப் பாடி விவரித்த
மகாத்மியம் இன்று பழங்கஞ்சி!
காக்கை கூட அமரத்தயங்கும் ;
 பஸ் ஸ்டாப் பெயருக்குப்
பயன்படும் காந்தி மண்டபம்,
காதலர்களின் சந்திப்பு மையம்
கரன்சி நோட்டில் கூட
தங்கள் மூக்குக்கண்ணாடியை
மட்டும் போனால் போகட்டுமென
விட்டுவைத்த நாங்கள் சந்திரனுக்குக் 
குறிவைத்த சந்திரயானைத்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தொலைந்து போய்விட்டது .
மரணமூச்சுவிடும் காந்தீயத்தையும்
புதைத்த குழியில் இருந்து
விடுவித்து என்ன புண்ணியம்?
சமாதிவழிபாடுகளில் தயிர்வடை
எண்ணிக்கை கூடி வருகிறது! [தொடரும்]

No comments:

Post a Comment