Sunday, 1 September 2019

ஈரப்படுத்திய இலை

காந்தி பிறந்த பூமி-
------------------------------------
ஈரப்படுத்திய இலை
------------------------------------
இருண்டிருந்தது கல்கத்தா
ஒளியில் மின்னியது   டில்லி
இந்து முஸ்லீம் மதப்பகையால்.
வன்முறையின் அடிமைப்பாசறையாகிய
நவகாளியின் கோரக்காட்சியில்
மனம் இருண்ட உங்களுக்கு
சுதந்திரம் பெற்ற மனமகிழ்வைப்
பங்கிட விரும்பிய நாடு அனுப்பிய  சேதி
"பாபு, நீங்கள் தான் தேசப்பிதா  ,
விடிகிற 15-8-1947 தான் இந்திய
நாட்டின் முதல் சுதந்திர தினம்.
எப்படி  நாங்கள் கொண்டாடுவோம்  நீங்களின்றி
நேருவும் படேலும் கொடுத்தனுப்பிய
கடிதம்  நடுநிசி கடந்து வந்தது
கொண்டுவந்த தூதுவரிடம்,
நினைவிருக்கிறது  மோகன்தாஸ்
நீங்கள்  கேட்ட முதல் கேள்வி
"நீர் சாப்பிட்டீரா?"
"இல்லையென்று வந்த பதிலுக்கு
நீங்கள் தந்த மறுமொழி"முதலில் சாப்பிடுங்கள்"
தூதுவர் உண்டு முடித்து  மீளும்போது
"என்ன முட்டாள்தனம்? இந்துவும்
முஸ்லிமும் இங்கே வெட்டி மடிகையில்
எப்படி வருவது கோலாகல டில்லிக்கு?
வங்காளத்தின்  அமைதி மீளாதென்றால்
என் உயிரையும் தரத் தயார்  "
நீங்கள் தந்தது இந்தப் பதில்
கண்கள் கலங்கப்பார்த்தார் தூதர்.
நின்றிருந்த மரத்தின் உலர்ந்திருந்த
இலையொன்று வீழ்ந்தது
உங்கள்  தலை மீது
அதை உள்ளங்கையில் வாங்கி,
சிறிது நீர்தெளித்து ஈரமாக்கினீர்
"கொண்டு செல்லுங்கள் இது தான் என் செய்தி;
கடவுளுக்கு நன்றி;
உங்களை  உலர்ந்த இலையோடு
அனுப்பாமல் ஈரப்படுத்தி
அனுப்பவிட்டாரே!"




No comments:

Post a Comment